ஆண்டவரே, நீரே என் கடவுள்; உம்மை நான் மகிமைப் படுத்துவேன், உமது திருப்பெயரைப் போற்றிப் புகழ்வேன்; ஏனெனில் நீர் வியத்தகு செயல்களைச் செய்தீர்; பழங்காலத்திலேயே வகுத்திருந்த உம் திட்டங்களைப் பிரமாணிக்கமாகவும் திண்ணமாகவும் செய்து முடித்தீர்.
மனிதனால் தாங்கக்கூடிய சோதனை தவிர வேறு எதுவும் உங்களுக்கு வந்ததில்லை. கடவுளோ, நம்பத்தக்கவர்; வெல்ல முடியாத சோதனைக்குள்ளாகும்படி உங்களை விடமாட்டார். சோதனை வரும்பொழுது அதைத் தாங்கிக்கொள்ளும் திறனளித்து அதனின்று தப்பவும் வழி செய்வார்.
ஆதலால், உன் கடவுளாகிய ஆண்டவர் வலிமையும் உண்மையும் பொருந்திய கடவுளென்றும், அவர் தமக்கு அன்பு செய்து தம்முடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஆயிரம் தலைமுறைகள்வரையிலும் தமது உடன்படிக்கையையும் இரக்கத்தையும் காக்கிறவரென்றும்,
நானோ உமது வல்லமையைப் புகழ்ந்து பாடுவேன்: காலை தோறும் உமது இரக்கத்தை நினைத்து அக்களிப்பேன். ஏனெனில், நீரே எனக்கு அரணாயிருக்கிறீர். நெருக்கிடையான வேளையில் எனக்கு அடைக்கலமாயிருக்கிறீர்.
ஆண்டவருடைய இரக்கமோ அவருக்கு அஞ்சி நடப்போர் மீது என்றென்றும் நிலைநிற்கும்: அவருடைய நீதியோ தலைமுறை தலைமுறையாய் நிலைத்திருக்கும். அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போர் மேலும், கட்டளைகளைக் கருத்தில் கொண்டு அவற்றைப் பின்பற்றுவோர் மேலும் அவர் நீதி நிலைகொள்ளும்.
ஹேத்: ஆண்டவரின் இரக்கம் என்றென்றும் அழிவுறாது, அவருடைய பரிவுக்கு முடிவு இல்லை. காலைதோறும் அவை புதுப்பிக்கப் படுகின்றன, நீர் மிக்கப் பிரமாணிக்கமுள்ளவர்;
உங்களை நடத்துபவராகிய ஆண்டவர் உன்னோடு இருப்பாரல்லது, அவர் உன்னை விட்டு நீங்கவும் உன்னைக் கைநழுவ விடவும் மாட்டாராகையால், நீ அஞ்சவும் கலங்கவும் வேண்டாம் என்றார்.
நன்மையான எக்கொடையும், நிறைவான எவ்வரமும், விண்ணினின்றே வருகின்றன. ஒளியெல்லாம் படைத்த தந்தையே அவற்றிற்குப் பிறப்பிடம். அவரிடம் எவ்வகை மாற்றமும் இல்லை; மாறி மாறி நிழல் விழச் செய்யும் ஒளியன்று அவர்.