1. தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது,
2. மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.
3. அப்பொழுது கடவுள், "ஒளி தோன்றுக!" என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார்.
4. கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.
5. கடவுள் ஒளிக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.
6. அப்பொழுது கடவுள், "நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்" என்றார்.
7. கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று.
8. கடவுள் வானத்திற்கு "விண்ணுலகம் என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது.
9. அப்பொழுது கடவுள், "விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!" என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
10. கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
11. அப்பொழுது கடவுள், "புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
12. புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார்.
13. மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.
14. அப்பொழுது கடவுள், "பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக!
15. அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
16. கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார்.
17. கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்;
18. பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
19. மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது.
20. அப்பொழுது கடவுள், "திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!" என்றார்.
21. இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
22. கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி "பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்" என்றுரைத்தார்.
23. மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது.
24. அப்பொழுது கடவுள், "கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக" என்றார்.
25. கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
26. அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார்.
27. கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
28. கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார்.
29. அப்பொழுது கடவுள், "மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும்.
30. எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
31. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.

திருவிவிலியம் 1995

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save