1. ஆதியிலே கடவுள் விண்ணையும், மண்ணையும் படைத்தார்
2. பூமி உருவமற்றதும் வெறுமையுற்றதுமாய் இருந்தது. பாதாளத்தின் முகத்தே இருள் பரவியிருந்தது. கடவுளின் ஆவியானவர் தண்ணீரின் மீது அசைவாடிக் கொண்டிருந்தார்.
3. அப்பொழுது கடவுள்: ஒளி உண்டாகுக என்று உரைத்தார். உரைக்கவே, ஒளி உண்டாயிற்று.
4. கடவுள் ஒளியை நல்லது என்று கண்டு, ஒளியை இருளினின்று பிரித்தார்.
5. ஒளிக்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் சேர்ந்து முதல் நாள் ஆயிற்று.
6. பின் கடவுள்: நீர்த்திரளின் நடுவில் வானவெளி உண்டாகி நீரினின்று நீர் பிரியக் கடவது என்றார்.
7. இவ்வாறு கடவுள் வான வெளியை உண்டாக்கி, வானவெளிக்குக் கீழேயுள்ள நீரையும், வானவெளிக்கு மேலேயுள்ள நீரையும் பிரித்தார். அதுவும் அவ்வண்ணமே ஆயிற்று
8. கடவுள் வானவெளிக்குப் பரலோகம் என்று பெயரிட்டார். மாலையும் காலையும் சேர்ந்து இரண்டாம் நாள் ஆயிற்று.
9. மேலும் கடவுள்: வானவெளிக்குக் கீழேயுள்ள நீரெல்லாம் ஒரே இடத்தில் ஒன்றாகச் சேரக்கடவது; காய்ந்த தரை தோன்றக்கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று.
10. காய்ந்த தரைக்கு நிலம் என்றும், ஒன்றாகச் சேர்ந்த நீர்த்திரளுக்குக் கடல் என்றும் கடவுள் பெயரிட்டார். அதுவும் நலமென்று கடவுள் கண்டார்.
11. அப்போது அவர்: விதையைப் பிறப்பிக்கும் பசும் புற்பூண்டுகளையும், பூமியின் மீது தம்மிடம் விதைகளைக் கொண்டுள்ள கனிகளைத் தத்தம் இனத்தின்படியே தரும் மரங்களையும் பூமி முளைப்பிக்கக்கடவது என்றார்.
12. அதுவும் அப்படியே ஆயிற்று. பூமி தத்தம் இனத்தின்படியே தத்தம் விதையைப் பிறப்பிக்கும் புற்பூண்டுகளையும், தத்தம் இனத்தின்படி தம்மிடம் விதைகளைக் கொண்டுள்ள மரங்களையும் முளைப்பித்தது. கடவுள் அதுவும் நல்லதென்று கண்டார்.
13. மாலையும் காலையும் சேர்ந்து மூன்றாம் நாள் ஆயிற்று.
14. மேலும் கடவுள்: பரமண்டல வான்வெளியில் சுடர்கள் உண்டாகிப் பகலையும் இரவையும் பிரிக்கக் கடவன; அவை பருவக் காலங்களையும் நாட்களையும் ஆண்டுகளையும் குறிப்பதற்கான அடையாளங்களாய் அமையக் கடவன.
15. அவை பரமண்டல வான்வெளியில் சுடர்களாய் இருந்து பூமிக்கு ஒளி தரக்கடவன என்றார். அதுவும் அப்படியே ஆயிற்று.
16. அப்போது கடவுள் பகலை ஆளப் பெரியதொரு சுடரும், இரவை ஆளச் சிறியதொரு சுடருமாக இரு பெரும் சுடர்களையும் விண்மீன்களையும் உண்டாக்கினார்.
17. கடவுள் அவற்றைப் பரமண்டல வானவெளியில் நிறுவிப் பூமியின் மேல் ஒளி வீசவும்,
18. பகலையும் இரவையும் ஆளவும், ஒளியையும் இருளையும் பிரிக்கவும் அமைத்தார். கடவுள் அதுவும் நல்லதென்று கண்டார்.
19. மாலையும் காலையும் சேர்ந்து நான்காம் நாள் ஆயிற்று.
20. மேலும் கடவுள்: அசைந்து உலாவும் உயிரினங்களையும், பூமியின் மேலே பரமண்டல வான்வெளியில் பறந்து திரியும் பறவைகளையும், நீர்த்திரள் பிறப்பிக்கக்கடவது என்றார்.
21. அப்போது கடவுள் திமிங்கிலங்களையும், உயிரும் அசைவும் உடையனவாய் நீர்திரளில் உற்பத்தியாகிய வகை வகையான பிராணிகள், வித விதமான பறவைகள் எல்லாவற்றையும் படைத்தார். கடவுள் அதுவும் நல்லதென்று கண்டர்.
22. அவர் அவைகளை ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள்; பறவைகளும் பூமியில் பலுகக் கடவன என்றார்.
23. மாலையும் காலையும் சேர்ந்து ஐந்தாம் நாள் ஆயிற்று.
24. பின் கடவுள்: பலவகையான உயிரினங்களையும், வீட்டு விலங்குகளையும், ஊர்வனவற்றையும், காட்டு விலங்குகளையும் பூமி பிறப்பிக்கக்கடவது என்றார். அப்படியே ஆயிற்று.
25. அப்போது கடவுள் பலவகைக் காட்டு விலங்குகளையும், வீட்டு விலங்குகளையும், பூமியின் மீது ஊர்வன யாவற்றையும் படைத்தார். கடவுள் அதுவும் நல்லதென்று கண்டார்.
26. பின்னர் கடவுள்: நமது சாயலாகவும் பாவனையாகவும் மனிதனைப் படைப்போமாக; அவன் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், மிருகங்களையும், பூமி முழுவதையும், பூமியின் மீது அசைவன ஊர்வன யாவற்றையும் ஆளக்கடவன் என்றார்.
27. இவ்வாறு கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார். தெய்வச் சாயலாகவே அவனைப் படைத்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
28. கடவுள் அவர்களை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகிப் பூமியை நிரப்பி அதனைக் கீழ்ப்படுத்துங்கள்; கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், பூமியின் மீது அசைந்து உலாவும் உயிரினங்கள் அனைத்தையும் ஆண்டு கொள்ளுங்கள் என்றார்.
29. மேலும் கடவுள்: இதோ பூமியின் மீது விதை தரும் புற்பூண்டுகள் எல்லாவற்றையும், தத்தம் இனத்தின்படி தம் விதைகளைக் கொண்டிருக்கும் விதவிதமான மரங்களையும் உங்களுக்கு உணவாகத் தந்துள்ளோம்;
30. மேலும், பூமியில் உயிர் வாழும் விலங்குகள் வானத்தில் பறக்கும் பறவைகள், உயிரோடு பூமியில் அசையும் எல்லாவற்றிக்கும் அதே புற்பூண்டுகளை உணவாகக் கொடுத்தோம் என்றார். அதுவும் அப்படியே ஆயிற்று.
31. அப்போது கடவுள் தாம் படைத்த எல்லாவற்றையும் நோக்கினார். அவை எல்லாமே மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் சேர்ந்து ஆறாம் நாள் ஆயிற்று.

பரிசுத்த வேதாகமம் 1973

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save