என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.
நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால், உங்கள் சகோதரரும் உங்கள் பிள்ளைகளும் தங்களைச் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்த தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள்.
நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.
ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஆகையால் நீ அவர்களை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.
ஆகையால் இஸ்ரவேல் வம்சத்தாரே, நான் உங்களில் அவனவனை அவனவன் வழிகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்கள் கேட்டுக்குக் காரணமாயிருப்பதில்லை.
துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.