“நீங்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. நானே உங்களைத் தேர்ந்தெடுத்தேன். நானே உங்களைக் கனிகொடுக்குமாறு ஏற்படுத்தினேன். உங்கள் வாழ்வில் இந்தக் கனி நிரந்தரமாக இருக்கவேண்டும். பிறகு என் பிதா என்பேரில் நீங்கள் கேட்கிற எதையும் உங்களுக்குத் தருவார்.
தன்னை நேசிக்கும் மக்களுக்கு தேவன் எல்லாவற்றின் மூலமும் நன்மை செய்கிறார் என்பதை நாம் அறிகிறோம். தேவன் இம்மக்களைத் தம் திட்டப்படியே தேர்ந்தெடுத்துள்ளார்.
உலகம் முக்கியமற்றதென்று நினைப்பதை தேவன் தேர்ந்துகொண்டார். உலகம் வெறுப்பதையும், பயனற்றதெனக் கருதுவதையும் அவர் தேர்ந்தெடுத்தார். முக்கியமென உலகம் பார்க்கிறவற்றை அழிப்பதற்காகவே அவர் அப்படிச் செய்தார். எந்த மனிதனும் தேவனுக்கு முன்பு தற் பெருமை அடையாதபடிக்கு தேவன் இப்படிச் செய்தார்.
குறிக்கோளை அடைந்து பரிசு பெறுவதற்கான முயற்சியையும் விடாமல் தொடர்ந்து நான் கைக்கொண்டு வருகிறேன். அது என்னுடையது. ஏனென்றால் அத்தகைய வாழ்வுக்குத்தான் இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவன் என்னை அழைத்திருக்கிறார்.
அந்த இரட்சிப்பை அடைய உங்களை தேவன் அழைத்தார். நாங்கள் பரப்புகிற நற்செய்தியைப் பயன்படுத்தி நீங்கள் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடையும் பொருட்டு தேவன் உங்களை அழைத்தார்.
தேவன் நம்மைக் காத்து தனது பரிசுத்த மக்களாக்கினார். இது நமது முயற்சியால் நிகழ்வதன்று. இது தேவனால் ஆவது. தம் கிருபையால் நம்மை அழைப்பது அவரது திட்டமாக இருந்தது. அவர் தனது கிருபையை இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே படைப்பு காலத்திற்கு முன்பிருந்தே வழங்குகிறார்.
அதைச் செய்வதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் பின்பற்றும்படியாக கிறிஸ்து ஓர் எடுத்துக்காட்டை உங்களுக்குத் தந்தார். அவர் செய்ததைப் போலவே நீங்களும் செய்யவேண்டும். கிறிஸ்து உங்களுக்காகத் துன்புற்றதால் நீங்கள் துன்பப்படும்போது பொறுமையாக இருக்கவேண்டும்.
உங்களை அழைத்த தேவன் பரிசுத்தமானவர். ஆதலால் நீங்களும் நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் பரிசுத்தமானவர்களாக இருங்கள். வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “நான் பரிசுத்தராக இருப்பதால், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்.”
உங்களுக்கு ஒருவன் தீமை செய்துவிட்டதால் பழிக்குப் பழிவாங்கும் எண்ணத்துடன் அவனுக்குத் தீமை செய்யாதீர்கள். உங்களை ஒருவன் அவமானப்படுத்தினால், பதிலுக்கு நீங்கள் அவமானப்படுத்தாதீர்கள். ஆனால் அவனை ஆசீர்வதிக்கும்படியாக தேவனை வேண்டுங்கள். நீங்கள் ஆசியைப் பெற அழைக்கப்பட்டீர்கள் என்பதால் இதைச் செய்யுங்கள்
பேதுரு அவர்களை நோக்கி, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி, இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்போது தேவன் உங்கள் பாவங்களை மன்னிப்பார். நீங்களும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
கர்த்தர் கூறுகிறார், “என்னிடம் ஆலோசனை கேட்க வராதவர்களுக்கும் நான் உதவினேன். ஜனங்கள் என்னைத் தேடாமல் இருந்தும் கண்டுகொண்டார்கள். எனது பெயரால் அழைக்கப்பட தகுதியற்ற ஜனங்களிடமும் நான் பேசினேன். ‘இதோ நான் இங்கே இருக்கிறேன்’ என்று சொன்னேன்”