ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார்.
நீர்நிலைகள் வழியாக நீ செல்லும்போது நான் உன்னோடு இருப்பேன்; ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா; தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டாய்; நெருப்பு உன்மேல் பற்றியெரியாது.
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்.
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று; அவரைப் போற்றுவோம். கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது.
எனவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, உறுதியோடு இருங்கள்; நிலையாய் நில்லுங்கள். ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.
அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக. சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது; ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக. இறுதிநாள் நெருங்கி வருகிறதைக் காண்கிறோம்; எனவே இன்னும் அதிகமாய் ஊக்கமூட்டுவோம்.
என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன்; மதிப்புமிக்கவன்; நான் உன்மேல் அன்பு கூர்கிறேன், ஆதலால் உனக்குப் பதிலாக மானிடரையும் உன் உயிருக்கு மாற்றாக மக்களினங்களையும் கொடுக்கிறேன்.
என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்" என்றார்.
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.
நாம் அடையும் இன்னல்கள் மிக எளிதில் தாங்கக் கூடியவை. அவை சிறிது காலம்தான் நீடிக்கும். ஆனால் அவை ஈடு இணையற்ற மாட்சியை விழைவிக்கின்றன. அம்மாட்சி எள்றென்றும் நிலைத்திருக்கும்.
அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்.
இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே. உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.
ஆர்வத்தோடு கொடுத்தால், தம் நிலைக்கேற்றவாறு எவ்வளவு கொடுத்தாலும் அது இறைவனுக்கு ஏற்புடையதாகும். தம்மிடம் இருப்பதற்குக் கூடுதலாக யாரும் கொடுக்க வேண்டியதில்லை.