ஒவ்வொருவனும் தனக்குள் முடிவு செய்தவாறு கொடுக்கட்டும்; முகவாட்டத்தோடோ, கட்டாயத்தினாலோ கொடாதீர்கள்; ஏனெனில் முகமலர்ச்சியுடன் கொடுப்பவன் மேல்தான் கடவுள் அன்புகூர்கிறார்.
கொடுப்பதற்கு உள்ளத்தில் ஆர்வம் இருந்தால், தன்னிடம் உள்ளதற்கு ஏற்றபடி எவ்வளவு கொடுத்தாலும் அது இறைவனுக்கு ஏற்புடையதாகும். தன்னிடம் இருப்பதற்கு மேலாக யாரும் கொடுக்கவேண்டியதில்லை .
நீங்களும் எல்லா வகையிலும் செல்வர்களாகி, உங்கள் வள்ளன்மையில் எக்குறைவுமின்றி விளங்குவீர்கள்; எங்கள் பணியின் வாயிலாக அவ்வள்ளன்மை மக்களின் நன்றியறிதலைக் கடவுள்பால் எழும்பச் செய்யும்.
விதைக்கிறவனுக்கு விதையும், உண்பதற்கு உணவும் கொடுத்து உதவுகின்றவர் விதைப்பதற்கு வேண்டியதை உங்களுக்கும் கொடுத்து அதைப் பெருகச் செய்து, உங்களுடைய ஈகையால் ஏராளமான பலன் விளையச் செய்வார்.
உங்களுள் எவனுக்காவது ஞானம் குறைவாயிருந்தால், அவன் கடவுளிடம் கேட்கட்டும்; அவனுக்குக் கொடுக்கப்படும். முகம் கோணாமல் தாராளமாக எல்லாருக்கும் கொடுப்பவர் அவர்.
ஆகவே, தீயோராகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிவீர்களானால், வானகத்திலுள்ள உங்கள் தந்தை, தம்மிடம் கேட்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய்ப் பரிசுத்த ஆவியை அளிப்பார்! " என்றார்.