ஏனெனில், தீர்க்கதரிசனமானது எக்காலத்திலாவது மனுஷருடைய மனதினால் உண்டானதல்ல. சர்வே சுரனுடைய பரிசுத்த மனுஷர்கள் இஸ்பிரீத்துசாந்துவினால் ஏவப்பட்டுப் பேசினார்கள்.
*** 20-21. கிறீஸ்துவர்கள் பரலோக மகிமைப்பிரதாப ஒளியில் சேருந்தனையும் இவ்வுலக அந்தகாரத்தில் நடக்கிறதினாலே, எப்போதும் தேவ வாக்கியத்தைத் திருவிளக்காகக் கையிலேந்தி அதின் ஒளியில் நடக்கவேண்டுமென்று அர்ச். இராயப்பர் படிப்பிக்கிறார். இத்தோடு இன்னொரு விசேஷத்தையும் கவனிக்கவேண்டுமென்று அவர் படிப்பிக்கிறார். என்னவெனில்: பரிசுத்த தீர்க்கதரிசிகள் தங்கள் சுயமனதாய் ஒருபோதும் பேசாமல், இஸ்பிரீத்துசாந்துவானவர் தங்களுக்கு ஏவினபடியே பேசின படியால் அந்த ஏவலின்படி அவர்கள் பேசினவைகளுக்கும், எழுதினவைகளுக்கும், எவனும் தன் சுயமனதின்படி அர்த்தமாவது வியாக்கியானமாவது செய்யலாகாதென்று கட்டளையிடுகிறார். இஸ்பிரீத்துசாந்துவினால் நடத்தப்படுகிற சத்திய திருச்சபை மாத்திரம் அவைகளுக்கு மெய்யான அர்த்தத்தையும் வியாக்கியானத்தையுஞ் சொல்லக்கூடும். இதனிமித்திம் உரோமான் கத்தோலிக்கு திருச்சபையிலுள்ள வேதபாரகரெல்லாரும் வேதவாக்கியங்களுக்கு வியாக்கியானஞ் செய்யும்போது, தங்கள் இஷ்டப்படி செய்யாமல், திருச்சபையின் படிப்பினையையும் நோக்கத்தையுமுன்னிட்டு வியாக்கியானம் செய்கிறார்கள். அன்றியும் அவர்கள் வேதசம்பந்தமாய் எழுதியதெல்லாவற்றையும், திருச்சபையானது பரிசோதித்து ஆராயும்படிக்கு அதற்கு ஒப்புக்கொடுத்து, திருச்சபையால் செய்யப்படும் திருத்தங்களையும், அங்கீகரிப்பையும் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
2 Peter 1:21