1. கர்த்தரிடமிருந்து பெரகியாவின் மகன் சகரியாவுக்கு ஒரு செய்தி வந்தது. இது தரியு பெர்சியாவை அரசாண்ட இரண்டாம் ஆண்டு எட்டாம் மாதம். (சகரியா பெரகியாவின் மகன். பெரகியா தீர்க்கதரிசியான இத்தோவின் மகன்) இதுதான் அந்த செய்தி.
2. கர்த்தர் உங்களது முற்பிதாக்கள் மேல் மிகவும் கோபங்கொண்டவரானார்.
3. நீங்கள் இவற்றை ஜனங்களிடம் சொல்லவேண்டும். கர்த்தர், “என்னிடம் திரும்பி வாருங்கள். நான் உங்களிடம் திரும்பி வருவேன்” என்கிறார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
4. கர்த்தர், “நீங்கள் உங்கள் முற்பிதாக்களைப் போன்றிருக்கக் கூடாது. கடந்த காலத்தில், தீர்க்கதரிசிகள் அவர்களிடம், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நீங்கள் உங்களது தீய வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என விரும்புகிறார். தீயவற்றைச் செய்வதை நிறுத்துங்கள்!’ என்றார்கள். ஆனால், உங்கள் முற்பிதாக்கள் நான் சொன்னதைக் கேட்கவில்லை” என்றார். கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
5. கர்த்தர், “உங்கள் முற்பிதாக்கள் போய்விட்டனர். அந்தத் தீர்க்கதரிசிகள் என்றென்றைக்கும் வாழவில்லை.
6. தீர்க்கதரிசிகள் எனது வேலைக்காரர்கள். நான் எனது வார்த்தைகளையும், சட்டங்களையும், போதனைகளையும் அவர்களைப் பயன்படுத்தி உன் முற்பிதாக்களுக்குச் சொன்னேன். உனது முற்பிதாக்கள் இறுதியில் தங்கள் பாடங்களைக் கற்றனர். அவர்கள், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தான் எவற்றைச் செய்ய வேண்டும் எனச் சென்னாரோ அதைச் செய்தார். நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைக்காகவும், நாங்கள் செய்த தீமைக்காகவும் அவர் எங்களைத் தண்டித்தார்’ என்றார்கள். எனவே அவர்கள் தேவனிடம் திரும்பி வந்தனர்” என்றார்.
7. தரியு அரசாண்ட இரண்டாம் ஆண்டு சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்து நாலாந் தேதியிலே கர்த்தரிடமிருந்து சகரியாவுக்கு இன்னொரு செய்தி வந்தது. (தீர்க்கதரிசி இத்தோவின் மகன் பெரகியா. இவனது மகன் சகரியா.) இதுதான் செய்தி.
8. இரவில், நான் ஒரு மனிதன் சிவப்புக் குதிரையில் ஏறி வருவதைப் பார்த்தேன். அவன் பள்ளத்தாக்கில் இருந்த நறுமணப் புதருக்குள் செடிகளுக்கிடையே நின்றான். அவனுக்குப் பின் சிவப்பும், மங்கின நிறமும், வெண்மையுமான குதிரைகள் நின்றன.
9. நான், “ஐயா இந்தக் குதிரைகள் எதற்காக?” என்று கேட்டேன். பிறகு என்னிடம் பேசின தேவதூதன், “இந்தக் குதிரைகள் எதற்காக உள்ளன என்பதை நான் உனக்குக் காட்டுவேன்” என்றான்.
10. பிறகு புதருக்குள் நின்ற அந்த மனிதன் “கர்த்தர் இந்தக் குதிரைகளைப் பூமியில் அங்கும் இங்கும் போவதற்காக அனுப்பினார்” என்றான்.
11. அதன் பிறகு நறுமணப் புதருக்குள் நின்ற கர்த்தருடைய தூதனிடத்தில் குதிரைகள், “நாங்கள் பூமி முழுதும் சுற்றித்திரிந்தோம், எல்லாம் அமைதியாக இருக்கிறது” என்றன.
12. பின்னர் கர்த்தருடைய தூதன், “கர்த்தாவே, நீர் இன்னும் எவ்வளவு காலத்துக்கு எருசலேமையும் யூதாவின் நகரங்களையும் ஆறுதல்படுத்தாமலிருப்பீர்? எழுபது ஆண்டுகளாக இந்நகரங்களின் மேல் நீர் உமது கோபத்தைக் காட்டினீர்” என்றான்.
13. பின்னர் கர்த்தர், என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதனிடம், நல்ல ஆறுதலான வார்த்தைகளைப் பேசினார்.
14. பின்னர் தூதன் ஜனங்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும் என்று சொன்னான். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “நான் எருசலேம் மற்றும் சீயோன் மீது உறுதியான அன்புகொண்டிருந்தேன்.
15. நான், தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று எண்ணும் நாடுகள் மீது மிகவும் கோபமாக இருக்கிறேன். நான் கொஞ்சம் கோபம் கொண்டிருந்தபோது என் ஜனங்களைத் தண்டிக்க அந்த நாடுகளைப் பயன்படுத்தினேன். ஆனால் அந்த நாடுகள் பெருஞ்சேதத்திற்குக் காரணமாயின.”
16. எனவே கர்த்தர் கூறுகிறார்: “நான் எருசலேமிற்குத் திரும்பி வருவேன். அவளுக்கு ஆறுதல் கூறுவேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “எருசலேமை மீண்டும் கட்டுவேன். எனது வீடு அங்கே கட்டப்படும்.”
17. தூதன் கூட, “‘எனது நகரங்கள் மீண்டும் வளம்பெறும். நான் சீயோனுக்கு ஆறுதல் அளிப்பேன். நான் எனது சிறப்புக்குரிய நகரமாக எருசலேமைத் தேர்ந்தெடுப்பேன்’ என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்” என்றான்.
18. பிறகு நான் மேலே பார்த்தேன். நான்கு கொம்புகளைக் கண்டேன்.
19. பிறகு நான் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “இக்கொம்புகளின் அர்த்தம் என்ன?” என்று கேட்டேன். அவர், “இக்கொம்புகள் இஸ்ரவேல், யூதா மற்றும் எருசலேம் ஜனங்களை அன்னிய நாடுகளுக்குத் துரத்தின” என்றார்.
20. பிறகு கர்த்தர் நான்கு தொழிலாளிகளைக் காட்டினார்.
21. நான் அவரிடம், “இந்த நான்கு ஆட்களும் என்ன செய்ய வந்திருக்கிறார்கள்?” எனக் கேட்டேன். அவர், “இம்மனிதர்கள் இக்கொம்புகளை அச்சுறுத்தி வெளியில் எறிந்துபோட வந்திருக்கின்றனர். அக்கொம்புகள் யூதாவின் ஜனங்களை அயல்நாடுகளுக்குப் பலவந்தமாக தூக்கி ‘எறிந்தன.’ அக்கொம்புகள் எவரிடமும் இரக்கம் காட்டவில்லை. அக்கொம்புகள் யூதா ஜனங்களை அயல் நாடுகளுக்குத் தூக்கி எறிவதின் அடையாளமாக உள்ளன” என்றார்.

Easy-to-Read Version (ERV-TA) தமிழ்

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save