23. பின்பு, அவர் ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் கூட நடந்துபோகையில், கதிர்களைக் கொய்யத் தொடங்கினார்கள்.
24. பரிசேயர் அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள்.
25. அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது,
26. அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தெய்வசமுகத்து அப்பங்களைத் தானும் புசித்துத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார்.
27. பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;
28. ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.