10. ஓய்வுநாளில் அவர் செபக்கூடம் ஒன்றில் போதித்துக்கொண்டிருந்தார்.
11. பதினெட்டு ஆண்டுகளாகப் பேயால் நோயுற்றிருந்த பெண் ஒருத்தி அங்கிருந்தாள். அவள் நிமிர்ந்து பார்க்கவும் முடியாத ஒரு கூனி.
12. அவளைக் கண்ட இயேசு, தம்மிடம் அழைத்து, அவளிடம், "அம்மா, உன் நோயினின்று நீ விடுபட்டாய்" என்று , தம் கைகளை அவள்மீது வைத்தார்.
13. உடனே அவள் நிமிர்ந்து, கடவுளை மகிமைப்படுத்தலானாள்.
14. இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைப் பார்த்து, செபக்கூடத்தலைவன் கோபவெறி கொண்டு, கூட்டத்தை நோக்கி, "வேலை செய்ய ஆறு நாள் உண்டே அந்நாட்களில் வந்து குணம்பெற்றுப் போங்கள். ஓய்வுநாளில் ஆகாது" என்றான்.
15. ஆண்டவர் அவனுக்கு மறுமொழியாக, "வெளிவேடக்காரே, ஓய்வு நாளில் உங்களுள் ஒவ்வொருவனும் தன் எருதையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய்த் தண்ணீர்காட்டுவதில்லையோ?
16. ஆபிரகாமின் மகளாகிய இவளைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டிவைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவளை ஓய்வுநாளிலே விடுவிப்பது ஆகாத செயலா?" என்றார்.
17. என்றதும், அவருடைய எதிரிகள் அனைவரும் வெட்கிப்போயினர். அவர் செய்த மாட்சிக்குரிய செயல்களை எல்லாம் பார்த்து, கூட்டம் அனைத்தும் மகிழ்ந்தது.