1. ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: "பெண் ஒருத்தி தன் கணவனால் தள்ளுண்டு அவனை விட்டகன்று வேறு ஒருவனை மணம் புரிவாளாகில், முந்தினவன் அவளிடம் திரும்பி வருவானோ? அந்தப் பூமி கெட்டுத் தீட்டுப்பட்டுப் போகவில்லையா? பல காதலர்களோடு நீ விபசாரம் செய்தாய், ஆயினும் நம்மிடம் திரும்பி வரமாட்டாயா? என்கிறார் ஆண்டவர்.
2. உன் கண்களை ஏறெடுத்துப்பார்; நீ விபசாரம் பண்ணாத இடமெது? வழி ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் அரேபியனைப் போல் உன் காதலர்களை எதிர்பார்த்துக் கொண்டு வழிகளில் உட்கார்ந்து காத்திருந்தாய்; உன் விபசாரங்களாலும் தீச்செயல்களாலும் பூமியைத் தீட்டுப்படுத்தினாய் அன்றோ?
3. ஆகையால் நாட்டில் மழை பெய்யாமல் போயிற்று, வசந்த கால மழை வரவில்லை. உன் முகம் இன்னும் விலைமாதின் முகம் போல் இருக்கிறது; நாணம் என்பதே உனக்கில்லை.
4. இப்போது தான் நீ நம்மை நோக்கி, 'நீரே என் தந்தை, நீரே என் கன்னிமையின் கணவர்,
5. நீர் என்றென்றைக்கும் கோபமாயிருப்பீரா? கடைசி வரையில் சினம் நீடிக்குமா?' என்கிறாய். இதோ, நீயே இவ்வாறு சொன்னாய்; ஆனால் உன்னால் இயன்ற வரையில் தீமைகளையே செய்தாய்."
6. யோசியாஸ் அரசன் நாட்களில் ஆண்டவர் எனக்குச் சொன்னார்: "பிரமாணிக்கமற்ற இஸ்ராயேல் என்னும் மங்கை என்ன செய்தாள், பார்த்தாயா? தன் விருப்பம் போல் உயர்ந்த மலை தோறும், தழைத்த மரத்தின் அடியிலெல்லாம் வேசித்தனம் பண்ணினாள்.
7. இவை யாவும் அவள் செய்த பிறகு, நம்மிடம் திரும்பி வருவாள் என்று நாம் எண்ணினோம்; ஆயினும் அவள் திரும்பி வரவில்லை; இதை அவளுடைய உண்மை தவறிய சகோதரி யூதா கண்டாள்:
8. அந்தப் பிரமாணிக்கமற்ற இஸ்ராயேல் செய்த எல்லா விபசாரங்களுக்காகவும், நாம் அவளை வெறுத்துத் தள்ளி அவளுக்கு மணமுறிவுச் சீட்டைக் கொடுத்தனுப்பினோம்; அதையும் அவள் பார்த்திருந்தாள்; பார்த்திருந்தும் அவளுடைய உண்மை தவறிய சகோதரி யூதா அஞ்சவில்லை; அதற்கு மாறாக, அவளும் விபசாரம் செய்தாள்.
9. விபசாரம் அவளுக்குத் தண்ணீர் பட்ட பாடாக இருந்ததால், கல்லோடும் மரத்தோடும் விபசாரம் செய்து நாட்டைத் தீட்டுப்படுத்தினாள்.
10. இவையெல்லாம் செய்த பிறகும் இஸ்ராயேலின் உண்மை தவறிய சகோதரியான யூதா முழு உள்ளத்தோடு நம்மிடம் திரும்பி வரவில்லை. திரும்பி வந்து விட்டதாக வெளிக்கு நடித்தாள், என்கிறார் ஆண்டவர்."
11. அப்பொழுது ஆண்டவர் எனக்குச் சொன்னார்: இருவரையும் ஒத்திட்டுப் பார்த்தால், பிராமணிக்கமற்ற இஸ்ராயேல் உண்மை தவறிய யூதாவைப் போல் அவ்வளவு குற்றமுள்ளவள் அல்லள்.
12. ஆதலால் நீ வடக்கு முகமாய்த் திரும்பி உரத்த குரலில் இந்த வார்த்தைகளை அறிவி: "ஆண்டவர் கூறுகிறார்: பிரமாணிக்கமற்ற இஸ்ராயேலே, திரும்பி வா; நீ வந்தால் நாம் முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டோம்; ஏனெனில் நாம் இரக்கமுள்ளவர், எப்போதும் கோபமாயிரோம், என்கிறார் ஆண்டவர்.
13. நீ செய்த துரோகத்தை ஒத்துக்கொள், போதும்: உன் கடவுளாகிய ஆண்டவருக்குத் துரோகம் செய்தாய், பச்சை மரத்தடிதோறும் ஓடி அந்நிய தெய்வங்களோடு விபசாரம் செய்தாய், நம் சொல்லைக் கேட்கவில்லை.
14. "பிரமாணிக்கமற்ற பிள்ளைகளே, திரும்பி வாருங்கள்;ஏனெனில் நாமே உங்கள் தலைவர்: உங்களில் ஒருவன் ஒரு பட்டணத்தினின்றும், இருவர் ஒரு குடும்பத்திலிருந்தும் வந்த போதிலும், நாம் உங்களைச் சீயோனில் கொண்டு போய்ச் சேர்ப்போம்.
15. நமது இதயத்திற்கேற்ற ஆயர்களை உங்களுக்குக் கொடுப்போம்; அவர்கள் உங்களுக்கு அறிவையும் ஞானத்தையும் ஊட்டுவார்கள்.
16. நீங்கள் பூமியில் பெருகிப் பலுகிய பின்னர், 'இதோ ஆண்டவருடைய உடன்படிக்கைப் பேழை' என்று சொல்லமாட்டார்கள்; அது அவர்கள் நினைவில் இராது, ஞாபகத்திற்கும் வராது; அதைக் குறித்து விசாரித்தாலும் இல்லை; இனி ஒரு முறை அது நிகழவும் மாட்டாது, என்கிறார் ஆண்டவர்.
17. அக்காலத்தில் யெருசலேமை ஆண்டவருடைய அரியணை என்பார்கள், ஆண்டவர் பேரால் எல்லா இனத்தாரும் யெருசலேமில் வந்து கூடுவார்கள்; அதற்குப் பிறகு தங்கள் தீய இதயத்தின் கெட்ட நாட்டத்தைப் பின்பற்ற மாட்டார்கள்.
18. அந்நாட்களில் யூதாவின் வீட்டார், இஸ்ராயேல் வீட்டாரோடு சேர்ந்துகொள்வர்; இரு வீட்டாரும் வடநாட்டை விட்டு, நாம் அவர்கள் தந்தையர்க்குக் கொடுத்த நாட்டுக்கு வருவர்.
19. மனந்திரும்புங்கள்: "உன்னை எவ்வாறு நம் புதல்வர்களோடு சேர்க்கலாம், இன்ப நாட்டை மக்களினங்களின் உரிமைச் சொத்துகளை விட மிக அழகான நாட்டை உனக்கு எவ்வாறு தரலாம் என்றெல்லாம் நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்; 'என் தந்தை' என என்னைக் கூப்பிடுவாய் என்றும், இனி ஒருநாளும் நம்மைப் பின்பற்றத் தவறமாட்டாய் என்றும் நாம் எதிர்பார்த்தோம்.
20. ஆனால், பிரமாணிக்கமற்ற மனைவி கணவனைக் கைவிடுவது போல், இஸ்ராயேல் வீடே, நீ நமக்குப் பிரமாணிக்கந் தவறினாய், என்கிறாய் ஆண்டவர்."
21. இஸ்ராயேல் மக்களின் அழுகைக் குரலும், வேண்டலும் வழிகளிலெல்லாம் கேட்கிறது; ஏனெனில் அவர்கள் கெட்ட வழியில் நடந்து, தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்தார்கள்.
22. பிரமாணிக்கம் தவறிய மக்களே, மனந்திரும்பி வாருங்கள்; நாம் உங்கள் பிரமாணிக்கமின்மையைக் குணமாக்குவோம்." "இதோ, நாங்கள் உம்மிடம் திரும்பி வருகிறோம், ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் நீரே.
23. நாங்கள் குன்றுகள் மேலும் மலைகள் மேலும் வணங்கியவை யாவும் பொய்த் தெய்வங்கள்; எங்கள் கடவுளாகிய ஆண்டவரிடத்தில் தான் இஸ்ராயேலின் மீட்பு இருக்கிறது; இது உண்மையிலும் உண்மை.
24. எங்கள் இளமை முதல் பார்த்து வருகிறோம்; வெட்கத்துக்குரிய சிலை வழிபாடு தான், எங்கள் தந்தையார் உழைத்துச் சேர்த்தவற்றையும், அவர்களுடைய ஆடுகளையும் மாடுகளையும், அவர்களின் புதல்வர்களையும் புதல்வியரையும், விழுங்கி விட்டது.
25. வெட்கமே எங்கள் படுக்கை; அவமானமே எங்கள் போர்வை; ஏனெனில் இளமை முதல் இன்று வரை நாங்களும் எங்கள் முன்னோர்களும், எங்கள் கடவுளாகிய ஆண்டவரின் முன்னிலையில் தீங்கு செய்தோம்; எங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வாக்கை நாங்கள் கேளாமற் போனோம்" என்பார்கள்,

பரிசுத்த வேதாகமம் 1973

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save