1. "கணவன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனை விட்டகன்று வேறு ஒருவனோடு வாழ்கையில், அக்கணவன் அவளிடம் மீண்டும் திரும்பிச் செல்வானா? அந்நாட்டு தீட்டுப்படுவது உறுதியல்லவா? நீ பல காதலர்களோடு விபசாரம் செய்தாய்; உன்னால் என்னிடம் திரும்பிவர முடியுமா?" என்கிறார் ஆண்டவர்.
2. உன் கண்களை உயர்த்தி மொட்டை மேடுகளைப்பார்; நீ படுத்துக்கிடக்காத இடம் உண்டோ? பாலை நிலத்தில் அராபியனைப்போல, பாதையோரங்களில் நீயும் காதலர்களுக்காகக்; காத்திருந்தாய்; உன் விபசாரங்களாலும் தீச்செயல்களாலும் நாட்டைத் தீட்டுப்படுத்தினாய்.
3. ஆகையால், நாட்டில் மழை பெய்யாது நின்று விட்டது; இளவேனிற் கால மழையும் வரவில்லை; உனது நெற்றி ஒரு விலைமாதின் நெற்றி; நீ மானங்கெட்டவள்.
4. இப்போது கூட 'என் தந்தையே! என் இளமையின் நண்பரே!' என என்னை நீ அழைக்கவில்லையா?
5. 'என்றென்றும் அவர் சினம் அடைவாரோ? இறுதிவரை அவர் சினம் கொண்டிருப்;பாரோ?' என்கிறாய். இவ்வாறு சொல்லிவிட்டு உன்னால் இயன்றவரை தீச்செயல்களையே செய்கிறாய்.
6. யோசியா அரசன் காலத்தில் ஆண்டவர் என்னிடம் கூறியது; "நம்பிக்கையற்ற இஸ்ரயேல் செய்ததைக் கண்டாயா? அவள் சென்று உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும், பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் விபசாரம் செய்தாள்.
7. இவை அனைத்தையும் செய்தபின் என்னிடம் திரும்பி வருவாள் என எண்ணினேன். அவளோ திரும்பி வரவில்லை. நம்பிக்கைத்; துரோகம் செய்த சகோதரி யூதா இதைக் கண்டாள்.
8. நம்பிக்கையற்ற இஸ்ரயேலுடைய விபசாரத்தின் காரணமாக, நான் அவளைத் தள்ளிவிட்டு அவளுக்கு மணமுறிவுச் சீட்டு கொடுத்ததை நம்பிக்கைத் துரோகம் செய்த அவளுடைய சகோதரி யூதா கண்டாள். எனினும், அவளும் அஞ்சாது சென்று விபசாரம் செய்தாள்.
9. விபசாரம் செய்வது அவளுக்கு வெகு எளிதாக இருந்ததால், கல்லோடும் மரத்தோடும் வேசித்தனம் செய்து நாட்டைத் தீட்டுப்படுத்தினாள்.
10. இவை அனைத்திற்கும் பிறகு கூட நம்பிக்கைத் துரோகம் செய்த அவளுடைய சகோதரி யூதா முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பி வரவில்லை; பொய் வேடம் போடுகிறாள்" என்கிறார் ஆண்டவர்.
11. ஆண்டவர் என்னிடம் கூறியது; நம்பிக்கையற்ற இஸ்ரயேல் நம்பிக்கைத் துரோகம் செய்த யூதாவைவிட நேர்மையானவள்.
12. நீ சென்று வடக்கே திரும்பி இச்சொற்களை உரக்கக் கூறு; நம்பிக்கையற்ற இஸ்ரயேலே, என்னிடம் திரும்பிவா, என்கிறார் ஆண்டவர். நான் உன்மீது சினம் கொள்ளமாட்டேன்; ஏனெனில், நான் பேரன்பு கொண்டவன், என்கிறார் ஆண்டவர். நான் என்றென்றும் சினம் கொள்ளேன்.
13. உன் குற்றத்தை நீ ஏற்றுக்கொண்டால்; போதும்; உன் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்தாய்; பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் அன்னியரை நாடி அங்குமிங்கும் ஓடினாய்; என் குரலுக்கோ நீ செவிசாய்க்கவில்லை, என்கிறார் ஆண்டவர்.
14. மக்களே! என்னிடம் திரும்பி வாருங்கள்; ஏனெனில், நானே உங்கள் தலைவன்; நகருக்கு ஒருவனையும் குடும்பத்திற்கு இருவரையுமாகத் தெரிந்தெடுத்து உங்களைச் சீயோனுக்குக் கூட்டி வருவேன்.
15. என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும், முன்மதியுடனும் வழிநடத்துவார்கள்.
16. நீங்கள் நாட்டில் பல்கிப் பெருகும் அக்காலத்தில் யாரும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழைபற்றியே பேசமாட்டார்கள். அது அவர்கள் எண்ணத்திலோ நினைவிலோ இராது. அது இல்லை என்று வருந்தி இனி ஒன்றும் செய்யமாட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.
17. அக்காலத்தில் எருசலேமை "ஆண்டவரின் அரியணை" என அழைப்பார்கள். ஆண்டவரின் பெயரை முன்னிட்டு எல்லா மக்களினத்தாரும் எருசலேமில் வந்து கூடுவர். தங்கள் தீய இதயப் பிடிவாதத்தின்படி இனி நடக்க மாட்டார்கள்.
18. அந்நாள்களில் யூதா வீட்டார் இஸ்ரயேல் வீட்டாரோடு சேர்ந்து கொள்வர்; நான் அவர்கள் மூதாதையருக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்த நாட்டுக்கு வட நாட்டிலிருந்து ஒன்றாக வந்து சேர்வர்.
19. உன்னை என் மக்களின் வரிசையிலே எவ்விதம் சேர்த்துக்கொள்வேன் என்றும் திராளான மக்களினங்களுக்கிடையே அழகான உரிமைச்சொத்தாகிய இனிய நாட்டை உனக்கு எவ்விதம் தருவேன் என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். "என் தந்தை" என என்னை அழைப்பாய் என்றும், என்னிடமிருந்து விலகிச் செல்லமாட்டாய் என்றும் எண்ணியிருந்தேன்.
20. நம்பிக்கைத் துரோகம் செய்த ஒரு பெண் தன் காதலனைக் கைவிடுவது போல, இஸ்ரயேல் வீடே! நீயும் எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்கிறாய், என்கிறார் ஆண்டவர்.
21. மொட்டை மேடுகளில் கூக்குரல் கேட்கிறது; அது இஸ்ரயேல் மக்களின் அழுகையும் வேண்டலுமாம்; ஏனெனில், அவர்கள் நெறிதவறித் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்தார்கள்.
22. என்னைவிட்டு விலகிய மக்களே! திரும்பி வாருங்கள்; உங்கள் நம்பிக்கையின்மையிலிருந்து உங்களைக் குணமாக்குவேன்; "இதோ நாங்கள் உம்மிடம் வருகிறோம். நீரே எங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
23. குன்றுகளிலிருந்தும் மலைகளில் செய்யப்படும் அமளிகளிலிருந்தும் கிடைப்பது ஏமாற்றமே; இஸ்ரயேலின் விடுதலை எங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் மட்டுமே உள்ளது.
24. எங்கள் இளமை முதல், எங்கள் மூதாதையர் உழைப்பின் பயனாகப் பெற்ற ஆடுமாடுகளையும், புதல்வர் புதல்வியரையும் வெட்கங்கெட்ட பாகால் விழுங்கிவிட்டது.
25. மானக்கேடே எங்கள் படுக்கை; அவமானமே எங்கள் போர்வை. ஏனெனில் எங்கள் இளமை முதல் இன்றுவரை நாங்களும் எங்கள் மூதாதையரும் எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம்; அவரது குரலுக்கு நாங்கள் செவிசாய்க்கவில்லை.'

திருவிவிலியம் 1995

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save