14. உங்களில் ஒருவன் வியாதியாயிருக்கிறானோ, அவன் சபையின் குருக்களை வரவழைப்பானாக. அவர்கள் ஆண்டவருடைய நாமத்தினாலே அவனைத் தைலத்தால் பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணுவார்கள். (மாற். 6:13.)
* 14. வியாதிக்காரர்கள் தங்களுக்காக வேண்டிக்கொள்ளவும், தங்கள்பேரில் தைலத்தைப் பூசவும் திருச்சபையின் குருமார்களை வரவழைக்கக் கற்பிக்கிறார். இது கத்தோலிக்கு உரோமன் திருச்சபையிலே எக்காலத்திலும் நடந்துவருகிற ஏழு தேவதிரவிய அநுமானங்களில் ஒன்றாகிய அவஸ்தைபூசுதல் என்றறிக.
15. அப்போது விசுவாசமுள்ள ஜெபம் வியாதிக்காரனை இரட்சிக்கும். ஆண்டவரும் அவனுடைய வருத்தத்தை இலகுவாக்குவார். அன்றியும் அவன் பாவங்களோடிருந்தால் அவைகள் அவனுக்கு மன்னிக்கப்படும். (மாற். 16:18.)