1. ஆண்டவருடைய வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது.
2. தந்தையர் திராட்சைக்காய் தின்ன, பிள்ளைகளுக்குப் பல் கூசிற்றாம்' என்னும் பழமொழியை இஸ்ராயேல் நாட்டைக் குறித்து நீங்கள் வழங்குவதன் பொருள் என்ன? ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்!
3. நம் உயிர் மேல் ஆணை! இஸ்ராயேலில் இப்பழமொழி இனி மேல் வழங்கப்படாது.
4. இதோ, ஆன்மாக்கள் அனைத்தும் நமக்கே சொந்தம்; தந்தையின் ஆன்மாவும் நம்முடையதே; மைந்தனின் ஆன்மாவும் நம்முடையதே. பாவஞ்செய்யும் ஆன்மாவே சாகும்.
5. எவனொருவன் நீதிமானாய் இருந்து சட்டம் சொல்வதையும் சரியானதையும் செய்வானாயின்- அதாவது,
6. மலைகளின் மேல் படைக்கப் பட்டதை உண்ணாமலும், இஸ்ராயேல் வீட்டின் சிலைகளை நோக்கிப் பாராமலும், அயலான் மனைவியைத் தீண்டாமலும், தீட்டுள்ள பெண்ணோடு சேராமலும்,
7. பிறனை ஒடுக்காமல், கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக் கொடுத்தும், கொள்ளையிடாமலும், பசித்தவனுக்குத் தன் அப்பத்தைப் பகிர்ந்தளித்தும், ஆடையின்றி இருப்பவனுக்கு ஆடை கொடுத்தும்,
8. வட்டிக்குப் பணம் கொடாமலும், தான் கொடுத்ததற்கு அதிகமாய் வாங்காமலும், அக்கிரமத்தில் உட்படாமலும், ஒருவர் ஒருவருக்கு இடையே உண்டான வழக்கை நியாயமாய்த் தீர்த்தும்,
9. நம் கற்பனைகளைக் கடைப்பிடித்தும், நாம் வகுத்த முறைமைகளின்படி நடந்தும் வந்தால்- அவனே நீதிமான்; அவன் வாழ்வான் என்பது உறுதி, என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
10. ஆனால் இம்மனிதனுக்கு ஒரு மகன் பிறந்து, அவன் திருடனாகவும், இரத்தம் சிந்துகிறவனாகவும், முன் சொல்லிய குற்றங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்கிறவனாகவும் இருந்தால் -அதாவது,
11. முன் சொல்லிய புண்ணியங்களை எல்லாம் செய்வதை விட்டு, அதற்கு மாறாக, மாலைகளில் படைத்தவற்றைச் சாப்பிட்டும், அயலான் மனைவியைத் தீண்டியும்,
12. சிறுமையும் எளிமையுமான பிறனை ஒடுக்கியும், கொள்ளை அடித்தும், அடைமானத்தைத் திரும்பக் கொடாமலும், சிலைகளை நோக்கிப் பார்த்து அருவருப்பானதைச் செய்தும்,
13. தான் கொடுத்ததற்கு அதிகமாய் வாங்கியும் வந்தால்- அவன் உயிர் வாழ்வானோ? அவன் உயிர் வாழான்; அருவருப்பான அவற்றையெல்லாம் செய்த அவன் சாவான் என்பது உறுதி; அவனது இரத்தப் பழி அவன் மேலேயே இருக்கும்.
14. ஆனால் அவனுக்குப் பிறந்த மகன் தன் தகப்பன் செய்த பாவங்களையெல்லாம் கண்டு பயந்து, அவ்வாறு செய்யாமல்- அதாவது,
15. மலைகளின் மேல் படைக்கப்பட்டதை உண்ணாமலும், இஸ்ராயேல் வீட்டின் சிலைகளை நோக்கிப் பாராமலும், அயலான் மனைவியைத் தீண்டாமலும்,
16. ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக் கொள்ளாமலும், கொள்ளையிடாமலும், பசித்தவனுக்குத் தன் அப்பத்தைப் பகிர்ந்தளித்தும், ஆடையின்றி இருப்பவனுக்கு ஆடை கொடுத்தும்,
17. ஏழையைத் துன்புறுத்தாமலும், வட்டி வாங்காமலும், தான் கொடுத்ததற்கு அதிகமாய் வாங்காமலும், நம் கற்பனைகளைக் கடைப்பிடித்தும், நாம் வகுத்த முறைமைகளின்படி நடந்தும் வந்தால்- இவன் தன் தகப்பனின் அக்கிரமத்துக்காகச் சாகமாட்டான்; இவன் வாழ்வான் என்பது உறுதி.
18. இவனுடைய தகப்பனோ பிறனைக் கொடுமைப்படுத்தி, சகோதரனைக் கொள்ளையடித்து, தன் இனத்தார் நடுவில் பொல்லாங்கு செய்ததால், இதோ, அவன் தன் அக்கிரமத்திலேயே மடிவான்.
19. ஆயினும் நீங்கள், 'தந்தையின் பாவத்தை மைந்தன் ஏன் சுமக்கக் கூடாது?' என்று கேட்கிறீர்கள். மகன் நீதி நியாயத்தைக் கடைப்பிடித்து நமது கட்டளையின்படி நடந்தான்; ஆதலால் அவன் சாகான்.
20. பாவம் செய்யும் ஆன்மாவே சாகும்; மகன் தந்தையின் பாவத்தையும், தந்தை மகனின் பாவத்தையும் சுமக்க மாட்டான்; நீதிமானுடைய நீதி அவன் மீதிருக்கும்; அக்கிரமியின் அக்கிரமம் அவன் மீதிருக்கும்.
21. ஆயினும் அக்கிரமி ஒருவன் தான் செய்த பாவங்களையெல்லாம் வெறுத்துத் தள்ளி விட்டு, நம் கற்பனைகளைக் கடைப்பிடித்து, சட்டம் சொல்வதையும் சரியானதையும் செய்வானாயின், அவன் உயிர் வாழ்வான் என்பது உறுதி;
22. அவன் சாகான்; அவன் ஏற்கெனவே செய்த தவறுகளை நினைக்கமாட்டோம்; அவன் கடைப்பிடித்த நீதியினால் உயிர் வாழ்வான்.
23. அக்கிரமி சாகவேண்டும் என்பது நம் விருப்பமோ? அவன் தன் தீய வழியை விட்டு மனந்திரும்பி உயிர் வாழ வேண்டும் என்பதல்லவா நமது விருப்பம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
24. நீதிமான் ஒருவன் தன் நீதி நெறியை விட்டு அக்கிரமியைப் போல் எல்லா வகையான பாவங்களையும் செய்தால், அவன் உயிர் வாழ்வானோ? அவன் ஏற்கெனவே செய்த நீதியான செயல்களில் ஒன்றையும் நாம் நினைக்கமாட்டோம். அவன் செய்த துரோகத்திலும் கட்டிக் கொண்ட பாவத்திலுமே அவன் சாவான்.
25. ஆயினும் நீங்கள், 'ஆண்டவர் நடந்து கொள்வது நீதியில்லை' என்று சொல்வீர்களோ? இஸ்ராயேல் வீட்டாரே, கேளுங்கள்: நமது வழியா நீதியானதில்லை? நீதியற்ற வழி உங்கள் வழியே அல்லவா?
26. நீதிமான் தன் நீதிநெறியை விட்டு விலகி, அநீதியைச் செய்தால், அதன் காரணமாய்ச் சாவான்; தான் செய்த அநீதியாலேயே சாவான்.
27. தீயவன் தான் நடந்த தீய வழியை விட்டு விலகி நீதி நெறியில் நடந்து, சட்டம் சொல்வதையும் சரியானதையும் செய்தால், தன்னையே காத்துக் கொள்வான்.
28. தன் நிலையை எண்ணிப் பார்த்து, தான் முன் செய்த அக்கிரமங்களையெல்லாம் விலக்கினதால், அவன் உயிர் வாழ்வான் என்பது உறுதி; அவன் சாகான்.
29. இன்னும் இஸ்ராயேல் வீட்டார், 'ஆண்டவர் நடந்து கொள்வது நீதியில்லை' என்று சொல்கிறார்கள். இஸ்ராயேல் வீட்டாரே, நமது வழியா நீதியற்ற வழி? உங்கள் வழியே அல்லவா?
30. ஆகையால், இஸ்ராயேல் வீட்டாரே, உங்களுள் ஒவ்வொருவனையும் அவனவன் நடத்தைக்குத் தக்கவாறு தீர்ப்பிடுவோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன். நீங்கள் உங்கள் அக்கிரமங்களையெல்லாம் விட்டு மனந்திரும்புங்கள்; அப்போது நீங்கள் பாவத்தில் விழ இடமிராது.
31. நமக்கு எதிராய் நீங்கள் செய்த துரோகங்களையெல்லாம் தூரமாக எறிந்து விடுங்கள்; புதிய உள்ளத்தையும் புதிய மனத்தையும் உங்களுக்கெனப் படைத்துக் கொள்ளுங்கள்.
32. இஸ்ராயேல் வீட்டாரே,நீங்கள் ஏன் சாக வேண்டும்? எவனும் சாக வேண்டும் என நாம் விரும்புவதில்லையே, என்கிறார் ஆண்டவராகிய இறைவன். ஆகவே மனந்திரும்புங்கள்; உயிர் வாழ்வீர்கள்."

பரிசுத்த வேதாகமம் 1973

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save