1. ஆதியிலே கடவுள் பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்தார். (சங். 32:6; 135:5: சர்வப். 18:1; அப். 14:14; 17:24.)
2. பூமியோவெனில் உருவமற்றதும் வெறுமையுற்றதுமாயிருந்தது; அன்றியும் பாதாளத்தின் முகத்தே இருள் வியாபித்திருந்தது; தேவ ஆவியானவர் தண்ணீரின்மீது அசைவாடிக்கொண்டிருந்தார்.
3. அப்பொழுது கடவுள்: ஒளி உண்டாகுக என்று உரைத்தார். உரைக்கவே, ஒளி உண்டாயிற்று. (எபி. 11:3.)
4. கடவுள் ஒளியை நலமென்று கண்டு அவ்வொளியை இருளினின்று பிரித்து,
5. ஒளிக்குப் பகல் என்றும் இருட்டுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையுங் காலையுஞ் சேர்ந்து ஒரு நாள் ஆயிற்று.
6. இப்பால் கடவுள்: தண்ணீர்களின் நடுவில் வானம் உண்டாகித் தண்ணீரினின்று தண்ணீரை வகுக்கக் கடவது என்றார்.
7. இவ்வாறு கடவுள் வானத்தை உண்டாக்கி அவ்வானத்துக்குக் கீழ்ப்பட்ட நீரையும் அவ்வானத்துக்கு மேற்பட்ட நீரையும் பிரித்தார். இதுவும் அவ்வண்ணமே ஆயிற்று. (சங். 135:5; 148:4; எரே. 10:12; 51:15.)
8. அப்பொழுது கடவுள் வானத்துக்குப் பரமண்டலம் என்று பெயரிட்டார். மாலையுங் காலையுஞ் சேர்ந்து இரண்டாம் நாள் ஆயிற்று.
9. பின்னும் கடவுள்: பரமண்டலத்துக்குக் கீழ்ப்பட்ட ஜலங்கள் ஒரே இடத்தில் ஒன்றாகச் சேரவுங் கட்டாந்தரை தோன்றவுங் கடவது என்றார். எனவே, அதுவும் அப்படியே ஆயிற்று.
10. கடவுள் கட்டாந்தரைக்குப் பூமி என்றும் நீர்த்தொகுதிக்குச் சமுத்திரம் என்றும் பெயரிட்டார்: இதுவும் நலமென்று கடவுள் கண்டுணர்ந்தார். (யோபு.38:4; சங். 32:7; 88:12; 135:6, 7.)
11. அப்போது அவர்: பூமியானது, விதையைப் பிறப்பிக்கும் பசிய புல் பூண்டுகளையும் பூமியின் மேலே தங்களில் தங்கள் வித்துக்களையுடைய கனிகளைத் தம் தம் சாதியின்படியே தரும் விருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவதென்று சொன்னார். அதுவும் அவ்விதமே ஆயிற்று.
12. அக்ஷணமே பூமியானது தம்தம் ஜாதியின்படி தம்தம் விதையைப் பிறப்பிக்கும் புல் பூண்டுகளையும் - தங்கள் தங்கள் இனப்படியே தங்களில் தங்கள் வித்துக்களையுடைய விருட்சங்களையும் முளைப்பித்தது. அதுவும் நல்லதென்று கடவுள் கண்டார்.
13. மாலையுங் காலையுஞ் சேர்ந்து மூன்றாம் நாள் ஆயிற்று.
14. மேலும் கடவுள்: பரமண்டல வானத்தில் சுடர்கள் உண்டாகிப் பகலையும் இரவையும் பிரிக்கவும், காலங்களையும் தினங்களையும் வருடங்களையும் குறிப்பதற் கடையாளங்களாயிருக்கவும், (சங். 135:7)
15. பரமண்டல வானத்தில் துலங்கிப் பூமியைப் பிரகாசப்படுத்தவுங் கடவன என்றார். எனவே அதுவும் அப்படியே ஆயிற்று.
16. அப்போது கடவுள் பகலை ஆளப் பெரிதொரு தீபமும், இரவை ஆளச் சிறிதொரு தீபமுமாக இரண்டு மகத்தான சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
17. அவைகளைப் பரமண்டல வானத்தில் ஸ்தாபித்துப் பூமியின் மேல் ஒளியை விடத் தக்கதாகவும்,
18. பகலையும் இரçவும் ஆளத் தக்கதாகவும் பிரகாசத்தையும் இருளையும் பிரிக்கத்தக்கதாகவும் (கட்டளையிட்டார்). கடவுள் இது வும் நலமென்று கண்டார்.
19. மாலையுங் காலையுஞ் சேர்ந்து நான்காம் நாள் ஆயிற்று.
20. அன்றியுங் கடவுள்: பரமண்டல வானத்துக்குக் கீழாகவும் பூமியின் மீதாகவும் ஜீவ ஆவியையுடைய ஊர்வனவற்றையும், பறப்பனவற்றையுஞ் ஜலங்கள் ஜனிப்பிக்கக் கடவன என்றார்.
21. அப்போது கடவுள் திமிங்கிலங்களையும், ஜலங்களில் வகை வகையாய் உற்பத்தியாக்கி, உயிரையும் அசைவையுமுடைய சகல பிராணிகளையும், விதவிதமான பறப்பன யாவையுஞ் சிருஷ்டித்தார். கடவுள் அதுவும் நல்லதென்று கண்டார்.
22. (பிறகு) அவர் அவைகளை ஆசீர்வதித்து: நீங்கள் பெருகிப் பலுகிக் கடலிலுள்ள ஜலங்களை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் விருத்தியாகக் கடவன என்றுஞ் சொன்னார்.
23. மாலையுங் காலையுஞ் சேர்ந்து ஐந்தாம் நாள் ஆயிற்று.
24. பின்னும் கடவுள் பூமியானது ஜாதி ஜாதியான ஜீவஜந்துக்களையும், வீட்டு மிருகங்களையும், ஊர்வன வற்றையும் இனமினமான காட்டு மிருகங்களையும் பிறப்பிக்கக்கடவது என்றார். எனவே அதுவும் அப்ப டியே ஆயிற்று.
25. அப்போது கடவுள் ஜாதி ஜாதியாகக் காட்டு மிருகங்களையும், வீட்டு மிருகங்களையும் தங்கள் தங்கள் வகைவிதமாய் பூமியில் ஊர்வன யாவையும் படைத்தார். கடவுள் இது வும் நல்லதென்று கண்டார்.
26. பின்னும்: நம்முடைய சாய லாகவும், பாவனையாகவும் மனித னைப் படைப்போமாக. அவன் சமுத் திர மச்சங்களையும் ஆகாயப் பறவைகளையும் மிருகங்களையும், பூவுலக னைத்தையும் பூமியில் அசைவாடும் ஊர்வன யாவற்றையும் ஆளக்கட வான் என்றார். (ஆதி. 5:1; 9:6; 1கொரி. 11:7; கொலோ. 3:10)
27. அவ்வாறு கடவுள் மனிதனைத் தம்முடைய சாயலாகப் படைத்தார். தேவ சாயலாகவே அவனைச் சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். (ஞானா.2:23; சர்வப்.17:1; மத்.19:4.)
28. பிற்பாடு கடவுள் அவர்களை ஆசீர்வதித்து: நீங்கள் பெருகிப் பலுகிப் பூமியில் நிறைந்து அதனைக் கீழ்ப்படுத்திச் சமுத்திர மச்சங்களை யும், ஆகாயப் பறவைகளையும் பூமி யின் மேல் அசைவாடுகிற எல்லா ஜீவப் பிராணிகளையும் ஆண்டு கொள்ளுங்கள் என்றருளினார். (ஆதி. 8:17; 9:1.)
29. பின்னையுங் கடவுள்: இதோ பூமியில் விதை தரும் சகலமான புற் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதி யின்படி தங்கள் தங்களில் விதை கொண்டிருக்கின்ற நானாவித மரங் களையும் உங்கட்கு உணவாயிருக்கும் படி அளித்தோம். (ஆதி. 9:3.)
30. மேலும் ஜீவப் பிராணனுள்ள பூமியின் சமஸ்த மிருகங்களுக்கும், ஆகாயத்திலுலாவும் எல்லாப் பறவைகளுக்கும், பூமியில் அசையும் ஜீவ ஆவியைக் கொண்டிருக்கிற எல்லாவற்றிற்கும் மேற்சொல்லிய புற் பூண்டுகளை ஆகாரமாகக் கொடுத்தோம் என்றார். அதுவும் அப்படியே ஆயிற்று.
31. அப்போது கடவுள் தாம் படைத்த யாவற்றையும் நோக்கினார். இதோ எல்லாம் மெத்தவும் நன்றாயிருந்தன. மாலையுங் காலையுஞ் சேர்ந்து ஆறாம் நாள் ஆயிற்று. (சர்வப். 39:21; மாற். 7:37.)