திருப்பாடல்கள் 104
1. என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்.
2. பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர்;
3. நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்; கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்; காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றனவர்!
4. காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர்; தீப்பிழம்புகளை உம் பணியாளராய்க் கொண்டுள்ளவர்.
5. நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்; அது என்றென்றும்; அசைவுறாது.
6. அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது; மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது;
7. நீவீர் கண்டிக்கவே அது விலகி ஓடியது; நீவீர் இடியென முழங்க, அது திகைப்புற்று ஓடியது;
8. அது மலைகள்மேல் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, அதற்கெனக் குறித்த இடத்தை அடைந்தது;
9. அது மீறிச்செல்லாதவாறு அதற்கு எல்லை வகுத்தீர்; பூவுலகை அது மீண்டும் மூடிவிடாதபடி செய்தீர்;
10. பள்ளத்தாக்குகளில் நீருற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்; அவை மலைகளிடையே பாய்ந்தோடும்;
11. அவை காட்டு விலங்குகள் அனைத்திற்கும் குடிக்கத் தரும்; காட்டுக் கழுதைகள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்;
12. நீருற்றுகளின் அருகில் வானத்துப் பறவைகள் கூடுகட்டிக்கொள்கின்றன; அவை மரக்கிளைகளினின்று இன்னிசை இசைக்கின்றன;
13. உம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்; உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது.
14. கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர்; மானிடருக்கெனப் பயிர்வகைகளை வளரச் செய்கின்றர்; இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கின்றீர்;
15. மனித உளத்திற்கு மகிழ்ச்சியூட்டத் திராட்சை இரசமும், முகத்திற்குக் களையூட்ட எண்ணெயும் மனித உள்ளத்திற்குப் புத்துணர்வூட்ட அப்பமும் அளிக்கின்றீர்.
16. ஆண்டவரின் மரங்களுக்கு - லெபனோனில் அவர் நட்ட கேதுரு மரங்களுக்கு -நிறைய நீர் கிடைக்கின்றது.
17. அங்கே பறவைகள் கூடுகள் கட்டுகின்றன; தேவதாரு மரங்களில் கொக்குகள் குடியிருக்கின்றன.
18. உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்குத் தங்குமிடமாகும்; கற்பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாகும்.
19. காலங்களைக் கணிக்க நிலவை நீர் அமைத்தீர்; ஆதவன் தான் மறையும் நேரத்தை அறிவான்.
20. இருளை நீர் தோன்றச் செய்யவே, இரவு வருகின்றது; அப்போது, காட்டு விலங்குகள் அனைத்தும் நடமாடும்.
21. இளஞ்சிங்கங்கள் இரைக்காகக் கர்ச்சிக்கின்றன; அவை இறைவனிடமிருந்து தங்கள் உணவைத் தேடுகின்றன.
22. கதிரவன் எழவே அவை திரும்பிச் சென்று தம் குகைகளுக்குள் படுத்துக்கொள்கின்றன.
23. அப்பொழுது மானிடர் வேலைக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்; அவர்கள் மாலைவரை உழைக்கின்றனர்.
24. ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தணை எத்தணை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
25. இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்; அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன.
26. அங்கே கப்பல்கள் செல்கின்றன; அங்கே துள்ளிவிளையாட லிவியத்தானைப் படைத்தீர்!
27. தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன.
28. நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன; நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன.
29. நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்; நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.
30. உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
31. ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக!
32. மண்ணுலகின்மீது அவர் தம் பார்வையைத் திருப்ப, அது நடுங்கும்; மலைகளை அவர் தொட, அவை புகை கக்கும்.
33. நான் வாழும் நாளெல்லாம் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; என்னுயிர் உள்ளவரையிலும் என் கடவுளுக்குப் புகழ் சாற்றிடுவேன்.
34. என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.
35. பாவிகள் பூவுலகினின்று ஒழிந்து போவார்களாக! தீயோர்கள் இனி இல்லாது போவார்களாக! என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு! அல்லேலூயா!

திருவிவிலியம் 1995

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save