10. ஓய்வு நாளில் ஓர் ஆலயத்தில் இயேசு போதித்துக் கொண்டிருந்தார்.
11. பிசாசினாலாகிய அசுத்த ஆவியைத் தன்னுள்ளே கொண்டிருந்த ஒரு பெண் அந்த ஜெப ஆலயத்தில் இருந்தாள். பதினெட்டு ஆண்டுகளாக அப்பெண்ணைப் பிசாசு ஊனப்படுத்திற்று. அவள் முதுகு கூனலாக இருந்தது. அவள் நிமிர்ந்து நிற்க முடியவில்லை.
12. இயேசு அவளைப் பார்த்து அழைத்தார். மேலும் அவளை நோக்கி, “பெண்ணே, உன் நோய் உன்னை விட்டு நீங்கிற்று” என்றார்.
13. இயேசு தன் கைகளை அவள் மேல் வைத்தார். அதே தருணத்தில் அவளால் நிமிர்ந்து நிற்க முடிந்தது. அவள் தேவனை வாழ்த்தினாள்.
14. ஓய்வு நாளில் இயேசு அவளைக் குணமாக்கியதைக் குறித்து ஜெப ஆலயத்தின் தலைவர் கோபம் அடைந்தார். அத்தலைவர் மக்களை நோக்கி, “வேலை செய்வதற்கு ஆறு நாட்கள் உள்ளன. அந்த நாட்களில் குணம்பெற வாருங்கள். ஓய்வு நாளில் குணமடைய வராதீர்கள்” என்றார்.
15. இயேசு பதிலாக, “நீங்கள் வேஷதாரிகளான மனிதர். ஓய்வு நாளில் கூட நீங்கள் எல்லாரும் உங்கள் வீட்டில் கொட்டிலில் இருக்கும் எருதுவையோ அல்லது கழுதையையோ அவிழ்த்து நீர் பருகுவதற்கு அழைத்துச் செல்கிறீர்கள்.
16. நான் குணமாக்கிய இப்பெண் நமது யூத சகோதரி. ஆனால் சாத்தான் அவளைப் பதினெட்டு ஆண்டுகளாகப் பீடித்திருந்தான். ஓய்வு நாளில் அவளது நோயினின்று அவளை விடுவிப்பது நிச்சயமாகத் தவறல்ல” என்றார்.
17. இயேசு இதைக் கூறியபோது அவரை விமர்சித்துக்கொண்டிருந்த அனைவரும் தங்களைக் குறித்து வெட்கமடைந்தார்கள். இயேசு செய்த அற்புதமான காரியங்களைக் குறித்து எல்லா மக்களும் மகிழ்ச்சியடைந்தார்கள்.